குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: பயிற்சியாளர், உரிமையாளர் கைது

தஞ்சாவூர்: குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பயிற்சியாளர், அவருக்கு உடந்தையாக இருந்த பயிற்சி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமூலை பைபாஸ் சாலையில் குதிரை ஓட்டும் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தை பட்டுக்கோட்டை முடிபூண்டார் நகரை சேர்ந்த ராஜ்குமார் (41) என்பவர் நடத்தி வருகிறார். நாட்டுசாலையை சேர்ந்த தமிழரசன் (26) பயிற்சியாளராக உள்ளார். இங்கு தினமும் காலை, மாலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குதிரை ஏற்றம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபல டாக்டரின் 10 வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவரும் இந்த பயிற்சி மையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குதிரை ஏற்றம் பயிற்சி பெற்றுவந்தார். அவருக்கு தமிழரசன் பயிற்சி கொடுத்து வந்தார். மற்ற மாணவிகள் சென்ற பின்னர் டாக்டர் மகளை மட்டும் கூடுதல் நேரம் இருக்கச்சொல்லி பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் தமிழரசன் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, கடந்த ஒரு வருடமாக மாணவிக்கு அடிக்கடி போன் மூலமாகவும் பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவர், குதிரை பயிற்சி மைய உரிமையாளர் ராஜ்குமாரை கண்டித்துள்ளார். ஆனால் இதை உரிமையாளர் கண்டு கொள்ளாமல் பயற்சியாளருடன் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் வெளியில் சொன்னால் அசிங்கப்படுத்தி விடுவோம் என்று டாக்டரிடம் பணம் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

* 10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை 72 வயது வார்டன் கைது
வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியின் 15 வயது மகன் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவன் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில தினத்திற்கு முன் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக மாணவன் சென்றுள்ளார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது பள்ளியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த அலிஸ்டர் டிசில்வா (72) மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவன் தனது தோழியிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தோழியின் பெற்றோர் மூலம் இந்த தகவல் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கும், மாணவரின் பெற்றோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி அலிஸ்டர் டிசில்வாவை பணி நீக்கம் செய்தனர். மேலும் இது குறித்த ஊட்டி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அலிஸ்டர் டிசில்வாவை கைது செய்தனர்.

The post குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: பயிற்சியாளர், உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: