குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: உரிமையாளர், பயிற்சியாளர் கைது

தஞ்சை: பட்டுக்கோட்டையில் குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பயிற்சியாளர், அவருக்கு உடந்தையாக இருந்த பயிற்சி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமூலை பைபாஸ் சாலையில் குதிரை ஓட்டும் பயிற்சி மையம் உள்ளது. ராஜ்குமார்(41) என்பவர் அந்த பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். தமிழரசன்(26) பயிற்சியாளராக உள்ளார். இங்கு தினமும் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குதிரை ஏற்றம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபல டாக்டரின் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவரும் இந்த மையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குதிரை ஏற்றம் பயிற்சி பெற்றுவந்தார். அவருக்கு தமிழரசன் பயிற்சி கொடுத்துவந்தார். மற்ற மாணவிகள் சென்ற பின்னர் டாக்டர் மகளை மட்டும் கூடுதல் நேரம் இருக்கச்சொல்லி பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் தமிழரசன் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக மாணவிக்கு அடிக்கடி போன் மூலமாகவும் பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து குதிரை பயிற்சி மைய உரிமையாளர் ராஜ்குமாரை, டாக்டர் கண்டித்தார். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாமல் தமிழரசனுடன் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் வெளியில் சொன்னால் அசிங்கப்படுத்திவிடுவோம் என்று பணம் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

The post குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: உரிமையாளர், பயிற்சியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: