புழல், திருமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளை 3 ஆசாமிகள் கைது

புழல்: புழல், திருமங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் அடுத்த விநாயகபுரம் உமாபதி நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். பின்னர், 21ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டு இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த பைக் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, புழல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட கொட்டிவாக்கம் இசிஆர் சாலையைச் சேர்ந்த ரமேஷ் (எ) குஸ்மி ரமேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், ஒரு சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அண்ணாநகர்: திருமங்கலம் பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (58). சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் சூபர்வைசராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி இரவு சாந்தியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (28), விநாயகம் (எ) ஐயப்பன் (24) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், 3 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post புழல், திருமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளை 3 ஆசாமிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: