லட்சுமி கடாட்சம் கிடைக்கும் எனக்கூறி பல லட்சத்துக்கு அரிய வகை கடல்விசிறி விற்பனை செய்தவர் கைது

*யூடியூப் விளம்பரத்தால் சிக்கினார்

திருமலை : லட்சுமி கடாட்சம் கிடைக்கும் எனக்கூறி பல லட்சத்திற்கு அரிய வகை கடல்விசிறியை விற்பனை செய்தவரை, யூடியூப் விளம்பரத்தை பார்த்து வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்.

இவர் கடல் விசிறி வீட்டில் இருந்தால் லட்சுமி கடாட்சம், திருமணம், குழந்தைகள் பிறப்பு, கணவன்-மனைவி வீட்டில் ஒன்றாக இருக்க முடியும் என யூடியூப்பில் விளம்பரம் செய்துவந்தார். அதோடு கடல் விசிறியை புகைப்பட பிரேம்களில் வைத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளார்.

ஸ்ரீனிவாஸ் யூடியூப்பில் பரவலாக விளம்பரம் செய்தது வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. யூடியூப்பில் இவை விற்பனை செய்யப்படுவதை பார்த்து, வனவிலங்கு நீதி ஆணையமே நேரடியாக களத்தில் இறங்கியது.

விஜயவாடாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் வீட்டில் நேற்று வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 900 கடல் விசிறிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து ஸ்ரீனிவாஸ்சிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கடலுக்கு அடியில் வாழும் கடல் விசிறிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் பல்வேறு விலங்குகளின் தோல்கள், முடிகள், பாம்பு தோல்கள், மான் தோல்கள் மற்றும் கடல் அட்டைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் விசிறிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மரங்களைப் போல தோற்றமளிக்கும் கடல் விசிறிகள் கடலில் 20 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. வனவிலங்கு நீதி ஆணையம் அளித்த தகவலின்படி, அதிரடி சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள், ஸ்ரீனிவாசை நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

The post லட்சுமி கடாட்சம் கிடைக்கும் எனக்கூறி பல லட்சத்துக்கு அரிய வகை கடல்விசிறி விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: