களியக்காவிளை அருகே நள்ளிரவில் கேரள தொழிலதிபரை கொன்று ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை: சொகுசு காரில் தீர்த்துக்கட்டிய நண்பருக்கு வலை

களியக்காவிளை: சொகுசு காரில் கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொன்று ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அதன் அருகே சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கேரள பதிவெண் கொண்ட வெள்ளை நிற சொகுசு கார் ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையில் நின்றது. சுமார் ஒருமணி நேரம் அங்கேயே நின்றதையடுத்து 11.30 மணியளவில் சிலர் காரின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது டிரைவர் இருக்கையில் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து களியக்காவிளை போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்பி சுந்தரவதனம் வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். இதில் காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கைமணம் பகுதியை சேர்ந்த தீபு (44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தீபு திருவனந்தபுரத்தில் சொந்தமாக 2 கிரஷர் நடத்தி வந்தார். மேலும் பொக்லைன் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். அவரது மனைவி விஜிமோள் (40). பாலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தொழிலதிபர் தீபு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொழில் விஷயமாக அடிக்கடி காரில் வருவார்.

அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தீபு பொக்லைன் இயந்திரம் வாங்குவதற்காக ரூ.10 லட்சத்துடன் காரில் இரவு 10 மணியளவில் மார்த்தாண்டம் வந்துள்ளார். அங்கு நண்பர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு களியக்காவிளை சென்றுள்ளார்.  இதையடுத்து ஒற்றாமரம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு நீண்டநேரம் இருவரும் பேசியுள்ளனர். பின்னர் அந்த நபர் காரில் இருந்து தனியாக இறங்கி சென்றுவிட்டார். அதன்பிறகே தீபு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

எனவே அவருடன் வந்த நண்பர் தீபுவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, ரூ.10 லட்சம், செல்போன், முக்கிய ஆவணங்கள் அடங்கிய பேக்கை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. பெட்ரோல் பங்க் அருகே உள்ள வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் தீபுவின் காரிலிருந்து கையில் பேக்குடன் ஒரு நபர் கீழே இறங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் மாயமான நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

The post களியக்காவிளை அருகே நள்ளிரவில் கேரள தொழிலதிபரை கொன்று ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை: சொகுசு காரில் தீர்த்துக்கட்டிய நண்பருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: