கோட்டை ரயில் நிலையம் – வேளச்சேரிக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பறக்கும் ரயில்கள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

வேளச்சேரி: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4வது வழித்தட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க மின்சார ரயில் சேவை பிரதானமாக உள்ளது. அதிலும், சென்னையின் முக்கியமான மின்சார ரயில் வழித்தடம் என்றால் அது, தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தையே சொல்லலாம்.

இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சில நிமிடங்கள் ஓடாமல் போனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றது. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகவும், 7 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரயில் சேவை மீண்டும் துவங்கும் என ரயில்வே நிர்வாகம் கூறியது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் பயணிகள் பார்க்டவுன் ஸ்டேஷனில் மாறி பறக்கும் ரயில்களில் சென்று வந்தனர்.

ஆனால் தற்போது சிந்தாதிரிப்பேட்டை சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 4வது வழித்தட பணிக்காக இந்திய ரிசர்வ் வங்கியின் இடத்தை கையகப்படுத்துவதில் தெற்கு ரயில்வேக்கு சிக்கல் இருந்தது. இதனால், பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் நிறைவு பெற வேண்டிய இந்த திட்டம் இழுத்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில், தற்போது 4வது வழித்தட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பதிலாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4வது வழித்தடத்தில் தண்டவாளங்கள் இணைப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடைமேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடை மேம்பாலம், மேற்கூரைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, தண்டவாள இணைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

The post கோட்டை ரயில் நிலையம் – வேளச்சேரிக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பறக்கும் ரயில்கள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: