இந்தியாவின் தாய் இந்திராகாந்தி: ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி பேட்டி


திருவனந்தபுரம்: இந்தியாவின் தாய் இந்திராகாந்தி என்றும் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனை தனது அரசியல் குரு எனவும் நடிகரும், ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபி கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றார். அவருக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி கிடைத்தது. இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் புங்குன்னத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கருணாகரனின் நினைவிடத்தை சுரேஷ் கோபி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா, இந்தியாவின் தாய். கருணாகரன், திறமையான நிர்வாகி. அவரும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் நாயனாரும் எனது அரசியல் குருக்கள்.

எனது வருகையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். எனது குருவுக்கு மரியாதை செலுத்தவே இங்கு வந்தேன். நாயனார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள உறவை போல் கருணாகரனின் குடும்பத்தினருடனும் எனக்கு உறவு உள்ளது. கருணாகரன், கேரள காங்கிரசின் தந்தையாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார். மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி, காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரனை வீழ்த்தினார். அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் ஆவார்.

The post இந்தியாவின் தாய் இந்திராகாந்தி: ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: