குறுவை சாகுபடி தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி போதாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி தொகுப்பால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 14ம் தேதி திமுக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பில் பெரும்பகுதி விதை நெல் மானியம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் மழையும், பாசன நீரும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு முழுமையாக செய்யப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யவில்லை. குறிப்பாக, சென்ற ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணமாக ₹35 ஆயிரம் கிடைக்காமலும், பயிர் பாதிப்புக்கு ஏற்ப காப்பீட்டு நிவாரணம் பெற முடியாமலும், டெல்டா விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல், டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா என்று இந்த குறுவை தொகுப்பில் எந்த குறிப்பும் இல்லை. இந்த தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப நிதியான ₹78.67 கோடியில், ₹24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் உள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post குறுவை சாகுபடி தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி போதாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: