ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்!

கேரள: ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு காலங்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்த சீசன் நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடைதிறப்பையொட்டி நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இன்று (15.06.2024) முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை மற்றும் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். 19-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். நடை திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

The post ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம்! appeared first on Dinakaran.

Related Stories: