இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி

புதுடெல்லி: பிரதமர் மோடி இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் முகாமிட்டு, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி என்பதால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், பிரதமர் மோடி முதல் முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு இன்று செல்கிறார். மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17வது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிக்கிறார்.

அத்துடன், ‘வேளாண் தோழிகள்’ (கிருஷி சகி) திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். பின்னர் தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமர், காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். வாரணாசியைத் தொடர்ந்து, நாளை (ஜூன் 19) பீகாருக்கு செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கிர் பகுதியில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்துவைக்கிறார்.

இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகியுள்ள இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். சூரிய மின்உற்பத்தி அமைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் மறுசுழற்சி நிலையம், சுமார் 100 ஏக்கரில் நீர்நிலைகள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100 சதவீத பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் முதல் விடுதிகளுடன் கூடிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

The post இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: