மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்

டார்ஜிலிங்: டார்ஜிலிங்கில் நடந்த ரயில்கள் மோதல் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலை முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் ஃபன்சிடேவா என்ற இடத்தில் நேற்று கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மனித தவறுகளால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் நேற்று முதல் விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்தன. விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்துகள் மூலம் கொல்கத்தா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்குவங்க அரசு நிர்வாகம் செய்திருந்தது. சம்பவ இடத்தில் பயணிகளை பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ்கள், உணவு மற்றும் அவசர படுக்கைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நேற்றிரவு மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சம்பவ இடத்தில் இருந்து கொல்கத்தா அடுத்த சீல்டாவை நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து சீல்டா ரயில்வே கோட்ட மேலாளர் (டிஆர்எம்) தீபக் நிகம் கூறுகையில், ‘மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சீல்டா வந்தடைந்தது. பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளோம்’ என்றார். இதுகுறித்து கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ‘விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. இந்த பிரச்னையில் ஏன் அவர்கள் கவனம் செலுத்தவில்லை? மக்கள் இறப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்களா? இதற்கு காரணம் அவர்கள் (பாஜக அரசு) ரயில்வேயை தனியார்மயமாக்க விரும்புகிறார்கள்’ என்று கூறினார்.

The post மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: