பராமரிப்பின்றி காட்சியளிக்கும் காந்தல் விளையாட்டு மைதானம்

ஊட்டி : ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. ஊட்டி நகரில் மைதானங்கள் இல்லாத கால கட்டத்தில் இம்மைதானமே பிரதானமானதாக இருந்தது.

ஏராளமான விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்துள்ளனர். தற்போது காந்தல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உரிய பராமரிப்பின்றியும், சுற்றுச்சுவர் இன்றியும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் மைதானம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கூடைப்பந்து விளையாட்டு தளம், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாகனங்கள், கால்நடைகள் மைதானத்திற்குள் செல்வதை தடுக்கும் பொருட்டு கதவும் அமைக்கப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், இம்மைதானம் தற்போது பராமரிப்பின்றி உள்ளது.

மைதானத்தின் நுழைவுவாயில் பகுதி உட்பட பல இடங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் கால்நடைகளும் மைதானத்திற்குள் உலா வருகின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post பராமரிப்பின்றி காட்சியளிக்கும் காந்தல் விளையாட்டு மைதானம் appeared first on Dinakaran.

Related Stories: