மக்களவை தேர்தல்.. 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று திமுக கூட்டணி சாதனை: 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வாக்கு..!!

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்ற கூட்டணியாக திமுக கூட்டணி திகழ்கிறது.

221 தொகுதிகளில் அதிக வாக்கு பெற்ற திமுக கூட்டணி
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. தென்சென்னை உள்ளிட்ட 32 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 192 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே அதிக வாக்கு. திருவள்ளூர், அரக்கோணம், பெரம்பலூர், கரூர், திருச்சிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கோவை, நாமக்கல், நீலகிரி தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே அதிக வாக்கு பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு என கருதப்படும் மேற்கு மண்டல தொகுதிகளில் திமுக அதிக வாக்கு பெற்றுள்ளதால் அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளது. மதுரை, தென்காசி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே அதிக வாக்கு.

8 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்கு
மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 8-ல் மட்டுமே அதிமுகவுக்கு திமுகவை விட கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன. எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்கு பெற்றுள்ளது. திருக்கோவிலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்கு பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளன.

சென்னையில் சரிந்த அதிமுக வாக்கு வங்கி
சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக கூடுதல் வாக்குகள் கிடைக்கவில்லை. ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர், ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதிகளிலும் அதிமுக வாக்கு வங்கி சரிந்துள்ளது. வழக்கமாக ஆர்.கே.நகர், ராயபுரத்தில் 28 முதல் 30% வாக்குகளை பெறும் அதிமுக, இந்த தேர்தலில் 22% வாக்கு மட்டுமே பெற்றுள்ளது.

2 சட்டமன்றத் தொகுதிகளில் தேமுதிகவுக்கு அதிக வாக்கு
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 2 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. திருமங்கலம் , அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே தேமுதிகவுக்கு அதிக வாக்கு கிடைத்துள்ளது.

3 சட்டமன்றத் தொகுதிகளில் பாமகவுக்கு அதிக வாக்கு
பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 3 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் பிற கட்சிகளை விட கூடுதல் வாக்கு பெற்றுள்ளது. பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு அதிக வாக்கு கிடைத்துள்ளது. பாமக போட்டியிட்ட 10 மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 60 சட்டமன்ற தொகுதிகளில் வெறும் 3-ல் மட்டுமே பாமகவுக்கு அதிக வாக்கு கிடைத்துள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட அதிக வாக்கு பெறாத பாஜக
மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட பாஜக அதிக வாக்கு பெறவில்லை. பாஜக போட்டியிட்ட 23 தொகுதிகளுக்கு உட்பட்ட 138 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட அக்கட்சி கூடுதல் வாக்கு பெறவில்லை. கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவிலில் பாஜக கூடுதல் வாக்கு பெறவில்லை.

The post மக்களவை தேர்தல்.. 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று திமுக கூட்டணி சாதனை: 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வாக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: