உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

காவேரிப்பட்டணம், ஜூன் 6: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு, மரக்கன்றுகள் நடுதல், கருத்தரங்கம், மஞ்சப்பை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கிருஷ்ணன், வினோதினி, நீலமேகம், கணேசன், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர்கள் பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

The post உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: