உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து: இந்தியா – குவைத் இன்று மோதல்

கொல்கத்தா: ஃபிபா உலக கோப்பை-2026, ஆசிய கோப்பை-2027க்கான கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வென்ற அணிகளுக்கு இடையிலான 2வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி 2வது சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் ஆசிய சாம்பியன் கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில், இந்தியா இதுவரை 4 ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் (1 வெற்றி, 1 டிரா, 2 தோல்வி) 2வது இடத்தில் உள்ளது. கத்தார் 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்கான் (4), குவைத் (3) முறையே 3வது, 4வது இடத்தில் உள்ளன.

இந்தியா இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் குவைத்தையும், ஜூன் 11ம் தேதி தோஹாவில் கத்தாரையும் எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் வென்றாலே 3வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாகும். மற்ற அணிகளின் வெற்றி/தோல்விகளும் வாய்ப்பை உறுதி செய்யும். உள்ளூரில் விளையாடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம். கேப்டன் சுனில் செட்ரிக்கு இது கடைசி ஆட்டம். அதனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இந்தியா முனைப்பு காட்டும். தரவரிசையில் பின்தங்கியுள்ள ஆப்கானிஸ்தானிடம் 1 டிரா, 1 தோல்வியை இந்தியா சந்தித்தது. அதனால் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.

* சுனில் செட்ரிக்கு கடைசி போட்டி
உலக கோப்பை தகுதிச் சுற்றில் ஜூன் 11ம் தேதி இன்னொரு ஆட்டம் எஞ்சியுள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் ஓய்வு பெற வேண்டும் என்பதால் சுனில் செட்ரி (39) இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெறுகிறார். இந்திய கால்பந்து உலகில் ஐ.எம்.விஜயன், பைசுங் பூட்டியா வரிசையில் பிரபலமானவர் சுனில். 2004 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2012ல் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தியாவுக்காக 150 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி 94 கோல் அடித்து உலக அளவில் 4வது இடம் வகிக்கிறார். ரொனால்டோ (128 கோல், 206 ஆட்டம் போர்ச்சுகல்), ஓய்வு பெற்ற அலி டாயி (108 கோல், 148 ஆட்டம், ஈரான்), மெஸ்ஸி (106 கோல், 180 ஆட்டம், அர்ஜென்டினா) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை கே.பி.செட்ரி இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

இவரது தாய் சுசிலா, இவரது இரட்டைச் சகோதரிகள் நேபாள தேசிய அணிக்காக கால்பந்து விளையாடியவர்கள். செகந்திராபாத்தில் பிறந்த சுனில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் 155 ஆட்டங்களில் விளையாடி 61 கோல் அடித்து அதிக கோலடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்திய அளவிலும் அதிக கோல் அடித்த வீரராக சுனில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் விஜயன் (73 ஆட்டம், 32 கோல்), பூட்டியா (88 ஆட்டம், 29 கோல்) உளளனர். இந்திய கால்பந்து கிளப்களுக்காக மட்டுமின்றி கன்சாஸ் சிட்டி விசார்ட்ஸ், யுனைடட் ஸ்போர்ட்ஸ் கிளப் (அமெரிக்கா), ஸ்போர்ட்டிங் சிபி-பி (ஸ்பெயின்) உட்பட பல வெளிநாட்டு கிளப்களுக்காவும் களம் கண்டுள்ளார்.

The post உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து: இந்தியா – குவைத் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: