வருங்காலத்தில் பாஜ என்பதே இருக்காது: தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: 2வது முறையாக தூத்துக்குடியில் இவ்வளவு பெரிய வெற்றியை வழங்கிய தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடர்ந்து பாஜவிற்கு எதிரான எண்ணம் இந்த நாட்டில் உருவாகி கொண்டிருக்கின்றது.

அவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடிய அவலங்கள் மக்களை அச்சுறுத்தக்கூடிய அந்த நிலை, இவையெல்லாம் பாஜவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி இருக்கின்றது. அதை மக்கள் தெளிவாக உணர்த்தி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பாஜவுக்கு இடமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சென்ற முறையைவிட இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

இது நிச்சயமாக முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி. பாஜவுக்கு எதிராக கிடைத்திருக்க கூடிய ஒரு தெளிவான வெற்றி. வருங்காலத்தில் பாஜ என்பதே இருக்காது. எங்களுடைய வாக்குறுதிகளை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். நம்புகிறார்கள் என்றாலே முதலமைச்சரின் மேல் உள்ள நம்பிக்கை தான். அதே நேரத்தில் எதிர்க்கட்சி மேல் இல்லாத நம்பிக்கையால் தான் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்.

The post வருங்காலத்தில் பாஜ என்பதே இருக்காது: தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: