மக்களவைத் தேர்தலில் 4.23% சதவீத வாக்குகள் மட்டுமே.. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது பாமக!!

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் பாமக, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக தாம் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வி உற்றது.
மேலும் 6 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது. இந்த மக்களவைத் தேர்தலில் 4.23% சதவீத வாக்குகளை மட்டுமே பாமகவால் பெற முடிந்தது.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெல்ல வேண்டும் அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெல்ல வேண்டும். எந்த தொகுதியிலும் வெல்லவில்லை என்றால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

ஆகவே 4.23 வாக்கு சதவீதத்துடன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் பாமக கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையில் பாமக கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் பாமக கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில் தற்போது பாமக கட்சிக்கும் மாநில அந்தஸ்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே 8% மேல் வாக்குகள் பெற்றதை அடுத்து நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறுகின்றன.

The post மக்களவைத் தேர்தலில் 4.23% சதவீத வாக்குகள் மட்டுமே.. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது பாமக!! appeared first on Dinakaran.

Related Stories: