நிதிஷ், சந்திரபாபுநாயுடுவை அழைப்பதா? இந்தியா கூட்டணி இன்று முடிவு: ராகுல்காந்தி பேட்டி

புதுடெல்லி: இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார், சந்திரபாபுநாயுடுவை அழைப்பது குறித்து இந்தியா கூட்டணி இன்று முடிவு செய்யும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிவு குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று ராகுல்காந்தி கூறியதாவது: மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சிப்பதற்காக முன்னாள் கூட்டாளிகளான ஐக்கியஜனதாதளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை அணுகலாமா வேண்டாமா என்பது குறித்து இந்தியா கூட்டணி இன்று முடிவு எடுக்கும்.

நாங்கள் எங்கள் கூட்டணி தலைவர்களுடன் இன்று ஒரு சந்திப்பு நடத்தப் போகிறோம். அப்போது நிதிஷ், சந்திரபாபுநாயுடுவை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்த கேள்விகள் அங்கு எழுப்பப்பட்டு பதிலளிக்கப்படும். கூட்டணிக் கட்சிகளின் கருத்தைக் கேட்காமல் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். எனவே இன்று எங்கள் கூட்டணி முடிவு செய்யும், அவர்கள் என்ன முடிவு செய்தாலும் நாங்கள் அதை ஏற்று செயல்படுவோம். இந்த பொதுத் தேர்தல் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம்.

அரசியலமைப்பைக் காப்பாற்ற இந்த நாட்டு மக்கள் ஒன்று திரள்வார்கள் என்பது என் மனதில் இருந்தது. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான முதல் மற்றும் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏழ்மையான மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அரசியலமைப்பைக் காப்பாற்ற எழுந்து நிற்கிறார்கள். மோடி, அமித் ஷா ஆகியோர் இந்த நாட்டை ஆள்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் இந்தத் தேர்தலில் நாட்டு மக்களால் சொல்லப்பட்ட முக்கிய விஷயம்.

இந்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக போராடினோம். இந்தியா கூட்டணியை ஆதரித்து அரசியலமைப்பை பாதுகாத்த உத்தரபிரதேச வாக்காளர்களுக்கு சிறப்பு நன்றி. வயநாடு அல்லது ரேபரேலி தொகுதியில் எதை தக்கவைப்பது என்பது குறித்து இன்னும் முடிவுஎடுக்கவில்லை. அமேதி தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா கட்சி விசுவாசி. கடந்த 40 ஆண்டுகளாக அமேதியில் பணியாற்றி வருகிறார். அவரது வெற்றி நிச்சயம் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிதிஷ், சந்திரபாபுநாயுடுவை அழைப்பதா? இந்தியா கூட்டணி இன்று முடிவு: ராகுல்காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: