வயநாடு, ரேபரேலியில் ராகுல் அட்டகாச வெற்றி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உ.பியின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவரான ஆனி ராஜாவும், பாஜ கூட்டணி சார்பில் பாஜ மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார்.

இதனால் இம்முறையும் அவர் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஆனி ராஜாவை விட 3,64,422 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பாஜ மாநிலத் தலைவர் சுரேந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். கடந்த தேர்தலிலும், இம்முறையும் கேரளாவிலேயே ராகுல் காந்தி தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உபியின் ரேபரேலி தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது.

இதுவரை சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், உடல் நலக்குறைவால் அவர் இம்முறை மாநிலங்களவை எம்பியாகி உள்ளார். இதனால் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளார். அவர் 6 லட்சத்து 87 ஆயிரத்து649 வாக்குகள் பெற்று 3.90,030 வாக்கு வித்தியாசத்தில் பாஜவின் தினேஷ் பிரதாப் சிங்கை வென்றார். ரேபரேலியில் ராகுலின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

The post வயநாடு, ரேபரேலியில் ராகுல் அட்டகாச வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: