காட்டுமன்னார்கோவில், ஜூன் 4: காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூர் வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் குரூமூர்த்தி(35). இவருக்கும், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சிறுபுலியூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் சூரியா(28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குருமூர்த்தி சென்னை, அம்பத்தூரில் உள்ள பேக்கரியில் தங்கி பணியாற்றி வந்தார். தம்பதியருக்கு இலிஷா(5), புவனேஷ்(2) என இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தனது புடவையால் சூரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூரியாவின் உடலை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் அளித்த தகவலின்பேரில் மோவூருக்கு வந்த சூரியாவின் தந்தை சுந்தர்ராஜ் மற்றும் உவினர்கள் மகள் இறப்பிற்கு அவரின் மாமியார் அம்சவள்ளியின் வரதட்சணை கொடுமைதான் காரணம் என தெரிவித்தனர். இதுகுறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து சார் ஆட்சியரின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஏற்கனவே வரதட்சணை காரணத்தால் சூர்யா கணவரின் வீட்டினரிடம் சண்டையிட்டுக்கொண்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுமையினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.