தேவதானப்பட்டி அருகே விளைநிலங்களுக்கு செல்ல சாலை அமைக்க கோரிக்கை

தேவதானப்பட்டி, ஜூன் 3: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் விளைநிலங்களுக்கு செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து பெரியஓடை தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி வழியாக ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு பாதை உள்ளது. சில்வார்பட்டிக்கு கிழக்கு பகுதியில் இந்த பெரிய ஓடை செல்வதால் ஓடையில் இருந்து கிழக்கு பகுதி விளைநிலங்கள் கிழக்குவெளி என அழைக்கப்படுகிறது.

இப்பகுதிக்கு செல்வதற்கு பெரிய ஓடையை கடந்து செல்லவேண்டும். இந்நிலையில் ஓடையின் கிழக்கு பகுதி வேட்டுவன்குளம் வரை விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களுக்கு செல்ல பெரியஓடை வழியாக செல்ல வேண்டும். கால்நடைகளை தோட்டத்திற்கு ஓட்டிச்செல்வது, விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்துச்செல்வது, விளைந்த பொருட்களை கொண்டுவருவது என அனைத்தையும் இந்த பெரிய ஓடை வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் மழைக்காலம் வந்துவிட்டால் இந்த பெரிய ஓடை முழுவதும் சேறும் சகதியும் மாறிவிடும். விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்வது பெறும் சவாலாக மாறிவிடுகிறது. எனவே பெரியஓடையின் கிழக்கு ஓடைகரையில் தெற்கு நோக்கி வேட்டுவன்குளம் கண்மாய் வரை சாலை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவதானப்பட்டி அருகே விளைநிலங்களுக்கு செல்ல சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: