மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: சோனியா, ராகுல், சரத்பவார், கெஜ்ரிவால் பங்கேற்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், சரத்பவார், கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர். 18வது மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்னும் வலுவான கூட்டணியை உருவாக்கின. நேற்று மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, ஜேஎம்எம், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா(யூபிடி) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) உள்ளிட்டவை கலந்து கொண்டன. காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி, கேசி வேணுகோபால் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வியாதவ், டிஆர் பாலு, அனில் தேசாய், சீதாராம் யெச்சூரி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சஞ்சய் சிங், ராகவ்சதா, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், கல்பனா சோரன், பரூக் அப்துல்லா, டி ராஜா மற்றும் முகேஷ் சஹானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதேபோல் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனது தாயாருக்கு கண் அறுவை சிகிச்சை என்பதால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த கூட்டத்தில் வருகிற 4ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணும் நாளுக்கான ஏற்பாடுகள் குறித்தும், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் 17சி படிவம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்தியா கூட்டணி பூத் ஏஜெண்ட்கள் விழிப்பாக இருப்பது குறித்தும், ஓட்டு எண்ணிக்கை முடிவடையும் வரை இந்தியா கூட்டணி ஏஜெண்ட்கள் அங்கு இருப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

The post மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: சோனியா, ராகுல், சரத்பவார், கெஜ்ரிவால் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: