குன்னூர் அருகே தேயிலை எஸ்டேட்டின் இரும்பு கேட் திருடிய இருவர் கைது

 

ஊட்டி,மே31: குன்னூர் அருகே அளக்கரை பகுதியில் மோதிலால் என்பவருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் நேற்று முன்தினம் எஸ்டேட் ஊழியர்கள் புஷ்பா,வேணி ஆகியோர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தில் எஸ்டேட்டிற்கு சொந்தமான இரும்பு கேட் இருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து ஊழியர்கள் இருவரும் உடனடியாக எஸ்டேட் உரிமையாளர் மோதிலாலை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

மோதிலால் ஒரு வாகனத்தை எடுத்து கொண்டு கேட்டை ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை தேடி உள்ளார். அப்போது குன்னூர் அருகே ஓரிடத்தில் இரும்பு கேட்டுடன் பிக்அப் வாகனம் நின்று இருப்பதை பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர் வெலிங்டன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரக்கு வாகனத்தில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கோத்தகிரி அருகே அரவேனு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30),நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த அங்குராஜ் (35)என்பதும்,தேயிலை எஸ்டேட்டில் இரும்பு கேட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கேட்டை பறிமுதல் செய்தனர்.

The post குன்னூர் அருகே தேயிலை எஸ்டேட்டின் இரும்பு கேட் திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: