காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

மதுரை, மே 31: ஓடும் தொழிலாளர் பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரை ரயில்வே எஸ்ஆர்எம்யூ சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை ரயில்வே ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள அலவன்சுகள் வழங்க வேண்டி ஒன்றிய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ சங்கம் சார்பில் மேற்கு நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி மதுரை எஸ்ஆர்எம்யூ உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் மதுரை கோட்ட செயலாளர் ரபீக் விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் ரபீக் பேசுகையில்,‘ரயில்வே அமைச்சகம் 7வது கமிஷன் பரிந்துரையின் படி டிஏ 50 சதவீதம் கொடுத்த 2024 ஜன.1ம் தேதி முதல் பயணப்படி உள்ளிட்ட அனைத்து அலவன்சுகள் உயர்த்தி கொடுக்க வேண்டும். ஆனால், அதனை வழங்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் மத்திய அரசினை கண்டிக்கின்றோம்.

மேலும் காலம் தாழ்த்தினால் மத்திய சங்கத்தில் ஆலோசித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். மேலும் ஓடும் தொழிலாளர் பிரிவில் உள்ள காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஓடும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஓடும் தொழிலாளர் பிரிவு உதவி கோட்ட செயலாளர்கள் நாகராஜ்பாபு, விஜய், கருப்பையா, முத்துக்குமார், நித்யராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: