வாசுதேவநல்லூரில் விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கடைகள் ஆக்கிரமிப்பு ஒரு வாரத்தில் அகற்ற பேரூராட்சி நிர்வாகம் கெடு

 

சிவகிரி,மே 31: வாசுதேவநல்லூரில் விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் கெடு விதித்துள்ள பேரூராட்சி நிர்வாகம், தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ பஜார், சந்தை, தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக சாலை போடப்பட்டது. இதனிடையே அப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டது. ஆனால் புதிதாக சாலை அமைக்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புகள் மீண்டும் பெருகி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு மந்தை விநாயகர் கோவில் தெருவில் விதிகளுக்கு புறம்பாக ெபாதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேரூராட்சிக்கு சொந்தமான சாலையில் தங்களது கடை ஆக்கிரமித்து செயல்படுகிறது. இதனால் பொது போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் பள்ளி வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே, இவ்வறிப்பு கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் தங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் மேற்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதோடு, மட்டுமல்லாமல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி தங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒரு வருடத்திற்கு குறையாத, ஆனால், 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

The post வாசுதேவநல்லூரில் விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கடைகள் ஆக்கிரமிப்பு ஒரு வாரத்தில் அகற்ற பேரூராட்சி நிர்வாகம் கெடு appeared first on Dinakaran.

Related Stories: