நெல்லை சார் பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.67 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கின

நெல்லை: நெல்லை அருகே பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த ரூ.1.67 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். நெல்லை மாவட்டம் பேட்டை அருகேயுள்ள கொண்டாநகரம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார் பதிவாளராக ஜோதிராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்றன. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதில் சார் பதிவாளருக்கு பணம் சங்கிலி தொடரில் கைமாறும் இடங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.50 மணியளவில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மெக்லரின் எஸ்கால் தலைமையில் போலீசார், கொண்டாநகரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் சார் பதிவாளர் ஜோதிராஜிடம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மெக்லரின் எஸ்கால் விசாரணை நடத்தினார். மேலும் அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகள், பணம் இருப்பு, வங்கி கணக்கு ஆவணங்கள், அவரது வங்கிக் கணக்கிற்கு சென்றடைந்த பண பரிவர்த்தனைகள், பத்திர எழுத்தர் மூலமாக வரவு வந்த பணம் பராமரிக்கப்பட்ட கையேடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. தொடர்ந்து விடிய விடிய விசாரணை நடந்து வருகிறது.

The post நெல்லை சார் பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.67 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Related Stories: