கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800 காளைகள் சீறிப்பாய்ந்தன: 250 வீரர்கள் களமிறங்கினர்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் சீறிப்பாய்ந்தன. 250 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே கொன்னையம்பட்டியில் அக்காண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதையொட்டி திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். இறுதியாக 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

கொன்னையம்பட்டி திடலில் காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதன்பின் ஒவ்ெவாரு காளையாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்கள் கையில் சிக்கின. சில காளைகள் வீரர்களை தூக்கி எரிந்து விட்டு துள்ளிக்குதித்து ஓடின.மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு களத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800 காளைகள் சீறிப்பாய்ந்தன: 250 வீரர்கள் களமிறங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: