தாயின் உயர் தகுதி

நபித்தோழர்களில் ஒருவரான அல்கமா (ரலி) மரணப் படுக்கையில் கிடக்கிறார். எந்த வினாடியும் உயிர் பிரிந்துவிடும் நிலைமை. சுற்றியிருப்பவர்கள் அவருக்குத் திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால், அல்கமாவினால் கலிமாவைத் திரும்பச் சொல்ல இயலவில்லை. ‘இறுதிமூச்சு விடும் நேரத்தில் கலிமா சொல்ல இயலாமல் சிரமப்படுகிறாரே’ என்று தோழர்கள் கவலைப்படுகின்றனர் என்ற செய்தி அறிந்து நபிகளார் (ஸல்) விரைந்து வந்து அல்கமாவின் நிலையைப் பார்க்கிறார்.

“அல்கமாவின் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார் நபிகளார்(ஸல்).
“இருக்கிறார் இறைத்தூதர் அவர்களே” என்றனர் தோழர்கள்.
“அவரை அழைத்து வாருங்கள்.” சற்று நேரத்தில் மூதாட்டி ஒருவரைத் தோழர்கள் அழைத்துவந்தனர்.

“அன்னையே, அல்கமா உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்? அவர்மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா?”
“ஆம் இறைத்தூதர் அவர்களே. எனக்குரிய உரிமையை அவன் ஒருபோதும் தந்ததில்லை. அவனுடைய மனைவிக்குத்தான் முன்னுரிமை தருவான்.”
“அல்கமா மரணத் தறுவாயில் இருக்கிறார். நீங்கள் அவரை மன்னித்துவிடுங்கள்” என்றார் நபிகளார்(ஸல்).
“முடியாது இறைத்தூதர் அவர்களே. அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.” தாய் உறுதியாக இருந்தார். உடனே நபிகளார் விறகுகளால் ஒரு நெருப்புக் குண்டம் தயாரிக்கச் சொல்லி, அதில் அல்கமாவைப் போடும்படி கூறினார். தோழர்கள் திகைத்தனர். ஆனாலும் இறைத்தூதரின் கட்டளையை நிறைவேற்றினர். நெருப்புக் குண்டம் தயார்.இன்னும் சில விநாடிகளில் தம் மகனை நெருப்பில் போட்டுவிடுவார்கள் என்று பதறிய அந்தத் தாய்,
“இறைத்தூதரே, வேண்டாம்.. வேண்டாம்… என் மகனை நெருப்பில் இடாதீர்கள். நான் அவனை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டேன்” என்று கண்களில் நீர் வழிய கூறினார்.

இறைத்தூதர் புன்னகைத்தபடி, “அன்புத் தாயே, நீங்கள் உங்கள் மகனை மன்னிக்காத நிலையில், அவர் இறந்திருந்தால் மறுமையில் அவருக்குக் கிடைக்க இருக்கும் தண்டனையைத்தான் நான் இங்கு நினைவூட்டினேன்” என்றார். பிறகு தோழர்களை நோக்கி, “அல்கமாவுக்குக் கலிமாவைச் சொல்லித் தாருங்கள்” என்றார். அல்கமா எந்தச் சிரமமும் இல்லாமல் கலிமாவை மொழிந்தார். அமைதியான முறையில் அவருடைய உயிர் பிரிந்தது. இஸ்லாமிய வாழ்வியலில் தாயின் அந்தஸ்து மிக உயர்ந்ததாகும். தந்தையை விட மூன்று மடங்கு உயர்வு தாய்க்கு உண்டு. பெற்றோரை – குறிப்பாகத் தாயைத் திட்டுவதும், தாயின் மனத்தைப் புண்படுத்துவதும் பெரும் பாவமாகும். இளைஞர்கள் இதை இதயத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.
– சிராஜுல்ஹஸன்

 

 

The post தாயின் உயர் தகுதி appeared first on Dinakaran.

Related Stories: