முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: இன்று நடைபெற இருந்த சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று நடைபெற இருந்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையே நீண்டகால பிரச்சனையாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை பிரச்னை. முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. உடனடியாக முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அனை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்திருந்தது. ஆனால் இதனையும் மீறி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரளா அரசு தரப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கேரள அரசின் விண்ணப்பம் இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதாக இருந்த நிலையில் கூட்டம் ரத்தானது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

The post முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: இன்று நடைபெற இருந்த சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: