பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பரமத்தி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. இதில் மாணவரணி பொறுப்பாளர்களும், தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஐயப்பன், பெருமாள், ராஜேஷ்கண்ணன், தங்கமணி, நானா நானி கார்த்திக், லாவண்யா முன்னிலை வகித்தனர். முகாமிற்கு, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்து ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் லலித்குமார், மணி, ரமேஷ்பாபு, பெருமாள், அருண், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர் அணி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார்.
