தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐந்து அலகுகள் மூலம் சுமார் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் கடந்த ஆண்டு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்ததைத்தொடர்ந்து அங்கு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் உற்பத்தி இன்னும் துவங்கவில்லை. மூன்று, நான்கு, ஐந்து அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடி துறைமுக பகுதியில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு வரக்கூடிய நிலக்கரி கையாளும் பகுதி -2ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது அதன் அருகே உள்ள செகண்டரி கிரஷர் எனப்படும் நிலக்கரி அரைக்கும் பகுதி – 2க்கும் மளமளவென பரவி இரண்டு பகுதிகளும் வேகமாக எரிய துவங்கியது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 4 வாகனங்கள் மூலம் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் மற்றும் நிலக்கரி அரைக்கும் பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
