கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோயிலில் மாசி தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோயிலில் மாசி மக திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சாமி தேரில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜையுடன் காலை 7.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள்(5ம் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 12ம் தேதி வரை பல்வேறு சிறப்பு அபிஷேக நிகழ்வுகளும், இரவு சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Related Stories: