பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி: பென்னிகுக் மணிமண்டபம் அருகே போராட்டம்

கூடலூர்: பெரியாறில் புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசை கண்டித்து, விவசாயிகள் லோயர்கேம்ப் பஸ் நிலையத்தில் இருந்து பென்னிகுக் மணிமண்டபம் வரை பேரணியாக சென்றனர். முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சார்பில் குமுளி நோக்கி பேரணி நடத்தப்படும் என பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையடுத்து லோயர்கேம்பில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாய சங்கம், பாரதிய கிஷான் சங்கம், பார்வர்டு பிளாக் கட்சியினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று கூடி பேரணியாக புறப்பட்டனர்.

இவர்கள் குமுளி வரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து பென்னிகுக் மணிமண்டபம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பென்னிகுக் மணிமண்டபம் அருகே கேரள அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கிய பிறகும், ஒரு கட்டுக்குள் வர மறுக்கிறது கேரள மாநில அரசு. பெரியாறு அணைக்கு எதிராக ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து 2014 தீர்ப்பின் அடிப்படையில் கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

 

The post பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி: பென்னிகுக் மணிமண்டபம் அருகே போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: