சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம்

சென்னை: ரூ.268.80 கோடியில் சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கத்தில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையங்களை கட்டுவதற்காக தனியார் நிறுவனத்திற்கு மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நிலையான மற்றும் போக்குவரத்து சார்ந்த நகர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பயணிகள் மெட்ரோ நிலையத்தை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதிலும் இத்திட்டம் ஒரு முக்கியமாக அமைகிறது.

இந்த பணியானது கட்டுமானப் பணிகள், கட்டிடக் கலை வேலைகள் மற்றும் கட்டுமான தொடர்புடைய அனைத்துப் பணிகளுடன், போக்குவரத்து சார்ந்த பிரத்யேக சொத்து மேம்பாட்டையும் உள்ளடக்கியது.
துரைப்பாக்கத்தில் 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. சோழிங்கநல்லூரில் அடித்தளம் மற்றும் 8 மேல் தளங்களைக் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. வழித்தடம்-3 மற்றும் வழித்தடம்-5 இடையிலான இணைப்பு பாதையுடன் சோழிங்கநல்லூர் வணிகக் கட்டிடத்தின் வழியாகச் செல்வது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும். இதன் மூலம் வணிக வளாகத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு நேரடியாக செல்ல முடியும். இந்த கட்டுமானப் பணிகள் மெட்ரோ பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பயணக்கட்டணம் அல்லாத வருவாயை கணிசமாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், பிரிட்ஜி அண்ட் ரூப் நிறுவனத்திற்கு ரூ.268.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜி அண்ட் ரூப் நிறுவனத்தின் பொது மேலாளர் ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன், இரண்டு நிலையங்களிலும் தடையற்ற நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள், மெட்ரோ பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிகக் கட்டமைப்புகள் ஆகியவை வழங்கப்படும். வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் பாதையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து, போக்குவரத்து சார்ந்த மேம்பாடு மற்றும் நிலையான நகர வளர்ச்சி ஆகியவற்றிற்கான சென்னை மெட்ரோ நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்துகிறது.

Related Stories: