தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாப பலி: 3 பெண்கள் படுகாயம், 2 மாடுகளும் பலியானாதால் பரபரப்பு

சென்னை: ஆதனூரில் தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 மாடுகளும் பலியானாதால் ஆதனூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மண்ணிவாக்கம்-ஆதனூர் சாலையில் நேற்று இரவு தனியார் கம்பெனி வேன் ஒன்று தறிக்கெட்டு ஓடி இரண்டு மாடுகளை மோதிவிட்டு எதிரே வந்த சரக்கு ஆட்டோ மற்றும் இரண்டு பைக்குகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் கிடந்த 3 பெண்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் 2 ஆண்களின் சடலத்தை மீட்டு பிரதி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில், மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் ரியா நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(52) என்பதும், அடையாரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றியதும் தெரியவந்தது. இந்த விபத்தில் இவரது மகள் சந்தியாவும் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதேபோல் மாடம்பாக்கம், கார்த்தி நகரை சேர்ந்த வெங்கடேசன்(58) தனது மனைவி சவிதா(48) என்பவரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்தபோது அதே வேன் மோதியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் அவரது மனைவி படுகாயத்துடன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

இதேபோல் சாலையில் நடந்து சென்ற மைதிலி என்ற பெண் வேன் மோதியதில் படுகாயத்துடன் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: