குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்

 

ஓசூர், மே 26: ஓசூர் அடுத்த இடையநல்லூர் அருகே கெயில் நிறுவனத்தினர், தடையை மீறி குழாய் பதிக்க முயன்ற நிலையில், விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூரில் கெயில் நிறுவனம் சார்பில், காஸ் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கெயில் குழாய் பதிக்கும் திட்டம் இடையநல்லூர், எடப்பள்ளி, சூதாளம் பகுதிகளில் விவசாயிகளின் அனுமதி பெறாமல் விவசாய நிலங்களில் துவங்கப்பட்டது.

அப்போது, விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் 23ம் தேதி சப் கலெக்டர் அலுவலகம் முன்பு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சப் கலெக்டர் பிரியங்கா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஜூன் 10ம் தேதி வரை எந்த பணிகளும் செய்யக்கூடாது என உறுதியளித்தார்.

இந்நிலையில் நேற்று, இயந்திரங்கள் மூலம் குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனத்தினர் இடையநல்லூர் அருகே துவக்கினர். இதையறிந்த விவசாயிகளும், விவசாய சங்க நிர்வாகிகளும் அங்கு சென்று மீண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், விவசாயிகள் நிலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ராஜூ, முருகேசன், தேவராஜ், திம்மாரெட்டி, மார்க்சிஸ்ட் கட்சி சுரேஷ், ராஜா, ராஜாரெட்டி, சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: