விசேஷ காலங்களில் குறைந்தளவு சத்தம் எழுப்பும் பட்டாசு வெடிக்க வேண்டும்: கம்பம் பகுதி மக்கள் கோரிக்கை

 

கம்பம், மே 25: தேனி மாவட்டத்தில் கம்பத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ காலங்களின்போது, விசேஷ வீட்டினர் திருமண மண்டபங்களுக்கு செல்லும் வழியில் அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகளை வெடித்தபடி செல்கின்றனர். பொதுவாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தம் 125 டெசிபல் முதல் 145 டெசிபல் வரை இருக்கும். அதேநேரத்தில், 60 முதல் 80 டெசிபலுக்கு மேல் கேட்கும் சத்தம் நமது காதுகளை பாதுகாக்கும்.

இந்நிலையில் இப்பகுதிகளில் பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தும் வெடிகளை வெடிக்கச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வகையான வெடிகள் வெடிக்கும்போது, சாலைகளில் அதிகளவில் குப்பைகள் சேருகின்றன. மேலும் வெடிகளிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை அப்பகுதியில் வசிப்போர் மற்றும் கடந்து செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஆஸ்துமாவால் நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘‘அதிகளவில் சத்தம் எழுப்பும் வெடிகளால் இதய நோயாளிகளுக்கும், அதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, இது போன்ற பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post விசேஷ காலங்களில் குறைந்தளவு சத்தம் எழுப்பும் பட்டாசு வெடிக்க வேண்டும்: கம்பம் பகுதி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: