மாற்றுத்திறனாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

 

சேலம், மே 25:சேலம் அருகே பைப்லைனை சேதப்படுத்திய தகராறில், மாற்றுத்திறனாளியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் காரிப்பட்டி அடுத்த சின்னகவுண்டாபுரம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன் (47). மாற்றுத்திறனாளியான இவர், விவசாயம் செய்துவருகிறார். இதற்காக அங்குள்ள பொது வழித்தடத்தில் பைப்லைன் மற்றும் மின்சார கேபிள் பதித்துள்ளார்.

இவரது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவர் வாங்கினார். சம்பந்தப்பட்ட பொது வழிப்பாதை தனக்குச் சொந்தமானது என கூறிவந்த சூர்யபிரகாஷ், கடந்த 15ம் தேதி அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தனசேகரன் பொது வழிப்பாதையில் பதித்திருந்த பைப்லைன் மற்றும் மின்சார கேபிள்களை, சூர்யபிரகாஷ் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி சேதப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனசேகரன் கேள்வி எழுப்பினார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மேலும், தனசேகரன் தாக்கப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசில் தனசேகரன் புகார் அளித்தார். இதன்பேரில், சூர்யபிரகாஷ், அவரது மனைவி ரேவதி, இவரின் தாயார் தங்கம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மாற்றுத்திறனாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: