கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சேலம், டிச.25: உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவு 11 மணிக்கு பிரார்த்தனை தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு ஆலயமணி ஒலிக்க, இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர். சேலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிறப்பு விழாவை கொண்டாடினர். அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். சேலம் 4 ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், சேலம் மறைமாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர். ஆலய பங்குதந்தை ஜெய்.பெர்னார்டு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதே போல், ஜான்சன்பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஸ்டேன்லிகுமார் தலைமையில் திருப்பலி நடந்தது. ஆலய பங்குதந்தை அந்தோணி மரிய ஜோசப் உள்பட ஆலய மக்கள் பங்கேற்றனர். சேலம் செவ்வைநகர் புனித ஜெயராக்கினி அன்னை இணை பேராலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், பங்கு தந்தை அழகுசெல்வம் தலைமையில் திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயத்தில் பங்கு தந்தை எட்வர்ட்ராஜன் தலைமையில் நடந்த திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகாலை 3 மணிக்கு, தென்னிந்திய திருச்சயையை சேர்ந்த ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. சேலம் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவஹர் வில்சன், இணை ஆயர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நற்கருணையும் வழங்கப்பட்டது. கோட்டை லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில்ராபர்ட் கெவின் தலைமையில் பிரசங்கத்துடன் கிறிஸ்துபிறப்பு பண்டிகை கொண்டாடப்பட்டது. அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் பெட்ரிக் தாணுப்பிள்ளை தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்து இயேசு பிறப்பு பாடல்களை பாடி மகிழ்ந்த மக்கள், நற்கருணையிலும் கலந்து கொண்டனர். பரிசுத்த திரித்துவ ஆலயத்தில், ஆயர் சாந்தி பிரேம்குமார் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் அதிகாலை நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர்.

Related Stories: