மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

சேலம், டிச. 25: சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த, ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து கூறியதாவது: தமிழ்நாடு அரசு பிராணிகள் வதைதடுப்பு சட்டம் பிரிவு 3(2)- (ஜல்லிக்கட்டு நடத்துதல்) விதிகள் 2017ன், வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் காளையின் உரிமையாளர்கள் அதன் விவரங்களை நிகழ்ச்சிக்கு முன்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.குறிப்பாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் 2 வயதிற்கு மேற்பட்டதாகவும், 120 செ.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், நல்ல உடல்நிலையை கொண்டவராகவும் இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்களும் நிகழ்ச்சிக்கு முன்னர் மேற்கண்ட இணையத்தளத்தில் தங்கள் பெயர்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். காளைகளை ஜல்லிக்கட்டு விழாவிற்கு கொண்டு செல்லும் போது பாதுகாப்பான முறையில் விதிகளுக்கு உட்பட்டு கொண்டு செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது காளைகளுக்கு ஊக்க மருந்துகள் கொடுப்பதோ, கண்களில் மிளகாய் பொடி தூவுதல், கூரிய கருவிகள் கொண்டு துன்புறுத்துதல் மற்றும் ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், மாடுகளின் கொம்புகளில் மாடுபிடி வீரர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் கொம்புகளில் ரப்பர் காப்புகளை அணிவித்தல் வேண்டும்.

மாடுபிடி வீரர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாடுபிடி வீரர்கள் ஊக்க மருந்தோ, போதைபொருட்களை உட்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்போது வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் (வடக்கு) சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாலினி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: