மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகளில் ரூ.109.67 கோடி இருப்பு

சேலம், டிச. 22:சேலம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி கணக்குகளில் ரூ.109.67 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் நூற்றுக்கணக்கான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்பில் கோடிக்கணக்கான கணக்குகள் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, வங்கி கணக்கு வைத்திருக்கும் பலர், அந்த கணக்கை மறந்து விட்டாலோ அல்லது வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்தினர் அந்த பணத்தை உரிமை கோராமல் விட்டாலோ, 10 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பணம் உரிமை கோரப்படாத பணமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அந்த பணம் ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (டிஇஏஎப்) நிதிக்கு மாற்றப்படும். இவ்வாறாக இந்தியாவின் வங்கிகளில் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வங்கி கணக்குகளில் ரூ.109.67 கோடி இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கான உரிமையாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. இதனிடையே, வங்கியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களை கண்டறிதல் தொடர்பான வங்கியாளர்களுக்கான கூட்டம் சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, ஆவின் பொது மேலாளர் குமரேஸ்வரன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, உரிமை கோரப்படாமல் வங்கிக் கணக்குகளில் செயலற்று இருக்கும் தொகையினை அதன் உரிமையாளர்களை கண்டறிந்து, அவர்களிடம் ஒப்படைப்பதற்கான முகாம் இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் அம்மாதம் 31ம் தேதி வரை முகாம் நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இம்மாதம் 1ம் தேதி தொடங்கிய முகாம், வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி முதலீடு நிறுவனங்கள் ஆகியவற்றில் ரூ.1.82 லட்சம் கோடிக்கான தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது. இம்முகாமின் நோக்கம் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்களை கண்டறிந்து ஒப்படைப்பதே ஆகும்.

சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை, சுமார் ரூ.109.67 கோடி வங்கிக் கணக்கில் உரிமை கோரப்படாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு உரிமை கோரப்படாத இருப்புத்தொகை, இந்திய ரிசர்வ் வங்கியின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி (டிஇஏஎப்) என்ற கணக்கிற்கு மாற்றப்படும். உரிமை கோரப்படாத இத்தொகையினை மீட்டெடுக்க, அருகில் உள்ள வங்கிக் கிளையில் கேஒய்சி ஆவணங்களை ஒப்படைத்து சரிபார்ப்பிற்குப் பின், உரிமையாளர் அல்லது அவர்களின் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் உரிமை கோரப்படாத தொகை பற்றி அறிய, இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள https://udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் பதிவிட்டு அறிந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: