குடியிருப்பு பகுதிகளில் அதிகாரி நேரில் ஆய்வு

 

ஓசூர், மே 25: ஓசூர் காமராஜ் நகரில், காபித்தூள் தொழிற்சாலை மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நேரில் ஆய்வு செய்தார். ஓசூர் முதல் பிரிவு சிப்காட் பகுதியில், காபி தூள் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து தூசு பரவி, அருகில் உள்ள குடியிருப்புகளில் படிவதால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காமராஜ் நகர் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், அந்த நிறுவனத்திற்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், காபித்தூள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக, பசுமை தாயகம் மற்றும் காமராஜ் நகர் பொதுமக்கள், கடந்த 21ம் தேதி வெற்றிலை, பாக்கு பழங்களுடன் தாம்பூலத்துடன் சென்று, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார், நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதுகுறித்து கடந்த 22ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதையடுத்து, நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ணன், காபி தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அருகில் உள்ள காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியின் மாடிகளில் கரிய நிறத்தில் படிந்துள்ள தூசி, துகள்களை செல்போனில் படம் பிடித்தார். தொடர்ந்து, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

The post குடியிருப்பு பகுதிகளில் அதிகாரி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: