கடந்த 10 ஆண்டு கால பாஜ ஆட்சியால் பாகிஸ்தானை விட இந்தியாவில் 2 மடங்கு வேலையில்லா திண்டாட்டம்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சியால், பாகிஸ்தானை விட இந்தியாவில் இருமடங்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது என்றுசெல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023 டிசம்பர் இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையின் படி 40 கோடியே 20 லட்சம் பேர் நிரந்தர வேலை இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானை விட இந்தியாவில் இருமடங்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது.

வடமாநிலங்களில் வேலையில்லா திண்டாட்ட பாதிப்பு கடுமையாக இருப்பதால் பாஜ ஆட்சிக்கு இளைஞர்களிடையே எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 23 இந்திய தொழில்நுட்ப கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டில் படித்த 21,500 ஐ.ஐ.டி. மாணவர்களில் 13,400 பேருக்கு தான் வளாகத் தேர்வில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மீதியுள்ள 8,100 மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக டெல்லி ஐஐடி யில் கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் 2024 கணக்கின்படி 40 சதவீத ஐஐடி மாணவர்கள் நாடுமுழுவதும் வேலையில்லாமல் இருந்து வருகிறார்கள். அதேபோன்று பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளி வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த மாணவர்களில் 67 சதவீதத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனறு ஒன்றிய அரசு மூலம் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல் உறுதி செய்கிறது.

ஐஐடி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பு படித்தவர்களிடையே உருவாகி வருகிற வேலையில்லா திண்டாட்டம் இதுவரை காணாத ஒன்றாகும். இத்தகைய அவல நிலைக்கு 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு தான் காரணமாகும்.
இதற்கு மக்களிடையே வரவேற்புக்கு மாறாக கடும் எதிர்ப்பு தான் உருவாகி வருகிறது.

எனவே, மோடி ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டி, 2004 பொதுத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற வாஜ்பாயின் பிரசாரத்தை புறக்கணித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததை போல, மீண்டும் நாட்டு மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது உறுதியாகி வருகிறது. இதன் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்ற செய்தி தான் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கடந்த 10 ஆண்டு கால பாஜ ஆட்சியால் பாகிஸ்தானை விட இந்தியாவில் 2 மடங்கு வேலையில்லா திண்டாட்டம்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: