போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க வேண்டும்

*கலெக்டர் அறிவுரை

ஊட்டி : நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. இதில் கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன் வரவேற்றார். பின்னர் மாவட்ட கலெக்டர் அருணா பேசுகையில்,“போதை இல்லா சிறப்பான நல்ல சமுதாயம் உருவாக இளைய சமுதாயத்தினரின் பங்கு அவசியம்.

10581 என்ற கட்டணமில்லாத எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகையிலை, போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தெரிவிக்கலாம். இளம் தலைமுறையினர் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். எப்போதும் போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு எதிராக இருக்க வேண்டும். மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் நன்று படிக்க வேண்டும். நன்கு விளையாட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் கௌசிக் முன்னிலை வகித்து பேசுகையில்,‘‘உடலுக்கு கேடு தரும் புகையிலை மற்றும் போதைப்பொருட்களை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாம் என முயற்சி செய்கின்றனர். ஒரு முறை பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்த தூண்டி அதற்கு அடிமையாக்குகிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு போதைப்பொருட்கள் பயன்படுத்தும் 10 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். போதைப்பொருட்கள் மிகவும் மோசமானது மட்டுமின்றி ஆபத்தானது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானால் உங்களுடைய வாழ்க்கையே பாழாகிவிடும். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. போதைப்பொருட்கள் என்பது மெல்ல கொல்லும் விஷம். எனவே, புகையிலை போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.போதைப்பொருட்கள் பயன்பாடு, விற்பனை உள்ளிட்ட தகவல்கள் தெரிந்தால், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் பேசுகையில்,‘‘அடுத்தடுத்து ஓடி கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். யாருக்குமே பொறுமை இல்லை. பொறுமையா இருக்கிற சூழலும் நமக்கு இல்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் சிறப்பான நிலைக்கு வர வேண்டியதை தான் கற்று கொடுக்கின்றனர். அதை குழந்தைகள் கற்று வாழ்க்கையில் சரியான பாதைக்கு செல்ல வேண்டும். ேபாதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் 9789800100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து நாடகம் மற்றும் மாணவர்களால் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவர்களிடையே பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், ஊட்டி ஆர்டிஓ மகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: