நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வராகநதியில் வெள்ளப்பெருக்கு


* மஞ்சளாறு அணை நீர்மட்டம் கிடுகிடு

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இதன் மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்கப்படுகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் வினாடிக்கு 250 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 877 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 472 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வெளியேற்றத்தைக் காட்டிலும் வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 48.39 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…
தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகல் 2 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சோத்துப்பாறை அணை நிரம்பி, அதன் உபரி நீரும் வராகநதியில் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் செல்லும் கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு உள்ளிட்ட சிற்றாறுகளில் வரும் தண்ணீரும் வராகநதியில் கலந்து செல்கிறது. இதனால், வராக நதி கரையோரப் பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் வராகநதியில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அணை நீர்மட்டம் கிடுகிடு…
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 50 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சோத்துப்பாறை அணை நிரம்பியது. அதாவது, அணையின் உச்ச நீர்மட்டமான 126 அடிவரை தண்ணீர் நிரம்பியது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 49.38 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. வரத்து நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் மஞ்சளாறு அணையும் தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 57 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம் நேறறு காலை நிலவரப்படி 50 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 135 கன அடியில் இருந்து 250 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் 51 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும். சோத்துப்பாறை அணை ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், மஞ்சளாறு அணையும் நிரம்பும் சூழல் உருவாகியுள்ளதால் இந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வராகநதியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Related Stories: