ஓமலூர், மே 24: ஓமலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக செல்லும் சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலையை ஒட்டியே குழாய் வழியாக கெயில் ஆயில் நிறுவனம் மெகா காஸ் குழாய்களை பதித்து வருகிறது.
இங்கு மண்ணில் பதிக்கப்படும் குழாய்களை இணைக்க, வெல்டிங் வைக்கும் பணிகளை, வடமாநில தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
நேற்று சிக்கம்பட்டி சாலையோரம் தொழிலாளர்கள் குழாய் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது குழாய் பணிக்காக காஸ் சிலிண்டர்கள் ஏற்றிய பிக்கப் வேன் சென்றது. திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் மீது மோதியது. இதனால் தறிகெட்டு ஓடிய பிக்கப்வேன், சாலையோரம் இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்ஐ சின்னப்பன் என்பவரின் ஓட்டு வீட்டிற்குள் சுவற்றை இடித்துக்கொண்டு புகுந்தது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வீடு சேதமடைந்தது. பிக்கப் வேனில் அமர்ந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் சுனில், சுமன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
The post லாரி மோதியதில் மாஜி எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பிக்கப் வேன் appeared first on Dinakaran.