வெள்ள பாதிப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிப்பு

 

ஈரோடு, மே 24: நம்பியூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு தொடர்பாக நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், எம்மாம்பூண்டி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் செல்லும் பகுதியில் வசித்த 72 ஆண்கள், 51 பெண்கள், 13 குழந்தைகள் என மொத்தம் 136 நபர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக காந்திபுரம் மேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரவு தங்க வைக்கப்பட்டனர்.

மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு நேற்று காலை உணவு, தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து மழைநீர் வடிய தொடங்கியதால் அவர்களுடைய இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் தங்க வைக்கபட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

வெள்ள பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் நேரில் பார்வையிட்டார். மேலம் மருத்துவ முகாமினையும் ஆய்வு செய்தார். நம்பியூர் காந்திபுரம்மேடு, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் காவல் துறையினரால் நிலைமை தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெள்ளபாதிப்பு ஏற்படாத வகையில், மணல் மூட்டைகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post வெள்ள பாதிப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: