டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 58 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 6ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட தேர்தலில், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை நடக்க உள்ளது.  இதற்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. 6ம் கட்ட தேர்தலில் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்க இருக்கும் வாக்குப்பதிவு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கு முதல் முறையாக ஆளும் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன. பாஜ தனித்து போட்டியிடுகிறது.

இதனால் கடந்த 2 மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளையும் வென்ற பாஜவுக்கு இம்முறை கடுமையான போட்டி நிலவுகிறது. இதுதவிர, அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் எஞ்சிய அனந்த்நக்-ரஜோரி தொகுதிக்கு நாளை தேர்தல் நடக்கிறது.

6ம் கட்ட தேர்தலில், ஒடிசாவின் சம்பல்பூரில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வடகிழக்கு டெல்லியில் பாஜ எம்பி மனோஜ் திவாரியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கன்னையா குமார், உபியின் சுல்தான்பூரில் பாஜ எம்பி மேனகா காந்தி, காஷ்மீரின் அனந்த்நக்-ரஜோரியில் பிடிபி கட்சி தலைவர் மெகாபூபா முப்தி, மேற்கு வங்க மாநிலம் தம்லுக் தொகுதியில் கொல்கத்தா முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், அரியானாவின் கர்னாலில் அம்மாநில முன்னாள் பாஜ முதல்வர் மனோகர் லால் கட்டார், குருஷேத்ரா தொகுதியில் பாஜ வேட்பாளரான தொழிலதிபர் நவீன் ஜிண்டால், குர்கானில் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், 58 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* எந்தெந்த மாநிலங்களில் நடக்கிறது?
6ம் கட்ட தேர்தலில் பீகாரில் 8 தொகுதியிலும், அரியானாவில் 10 தொகுதியிலும், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதியிலும், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதியிலும், டெல்லியில் 7 தொகுதியிலும், ஒடிசாவில் 6 தொகுதியிலும், உபியில் 14 தொகுதியிலும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 58 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: