வாக்குப் பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-யை பொதுவில் வௌியிடுவது தீமைக்கு வழி செய்யும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

புதுடெல்லி: வாக்குப் பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-யை பொதுவில் வௌியிடுவது தீமைக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதங்களை விரைவாக வெளியிடக்கோரி ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை கடந்த 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் 17சி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா?. 66 சதவீத வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் தெரிவிப்பது 17சி தரவுகளின் அடிப்படையில் தானே?. அதில் ஏதேனும் தேர்தல் ஆணையத்துக்கு பிரச்சனை உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதங்களை விரைவாக வெளியிடக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி மேற்கண்ட வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு விளக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், “இணையதளத்தில் படிவம் 17சி பதிவேற்றம் செய்வது என்பது தீமைக்கு மட்டுமில்லாமல் தவறான செயல்பாடுகளுக்கு கண்டிப்பாக வழிவகுக்கும். தற்போதைக்கு அசல் படிவம் 17சி என்பது ஸ்ட்ராங் ரூமில் மட்டுமே உள்ளது. அதன் நகல் வாக்குச் சாவடி முகவர்களிடம் உள்ளது. 17சி படிவத்தை இணையதளத்தில் வெளியிடுவது மூலம் அதனை தவறாக சித்தரித்து, அதன் உண்மைத்தன்மையை மாற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது இதனால் வாக்கு எண்ணும் முடிவுகள் உட்பட, ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறையிலும் பரவலான பொது அசௌகரியத்தையும், அவநம்பிக்கையையும் உருவாக்கும் சூழல் ஏற்படும்.

மேலும் நடந்து கொண்டுள்ள மக்களவை தேர்தலின் ஒவ்வொரு கட்டத்துக்கும் வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள ஏழு கட்டங்களில் ஐந்து முடிவடைந்துள்ளது. மீதமுள்ள இரண்டு கட்டங்களுக்கு மட்டும் தனியாக புதிய நடைமுறையை கொண்டு வரமுடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் படிவம் 17சியை இணையதளத்தில் வெளியிடுவது என்பது சாத்தியம் கிடையாது” என்று தெரிவித்துள்ளது.

The post வாக்குப் பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-யை பொதுவில் வௌியிடுவது தீமைக்கு வழி செய்யும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு appeared first on Dinakaran.

Related Stories: