வனத்துறை பராமரித்து வந்த 25 செம்மரங்கள் வெட்டிக்கடத்தல் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு

சேத்துப்பட்டு, மே 23: சேத்துப்பட்டு அருகே வனத்துறை பராமரித்து வந்த 25 செம்மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டிக்கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையின் தொடர்ச்சியாக உள்ள சேத்துப்பட்டு அடுத்த மொடையூர், பெரணம்பாக்கம், வடவிளாப்பாக்கம், விளாப்பாக்கம், தேவிகாபுரம், தச்சூர் ஆகிய கிராமங்களையொட்டி உள்ள குன்றுகள் என பல்வேறு பகுதிகளில் வனத்துறை சார்பில் செம்மரங்கள் நடப்பட்டு, தற்போது பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. இதன் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும். அதன்படி, சேத்துப்பட்டு அடுத்த மொடையூர் குன்றின் மீது வனத்துறை சார்பில் சுமார் 1,500 செம்மரங்கள் நடப்பட்டு பெரிய அளவில் வைரம் பாய்ந்த மரங்களாக வளர்ந்து காணப்படுகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் செம்மரக்கடத்தல் கும்பல் சுமார் 25க்கும் மேற்பட்ட செம்மரங்களை இயந்திர மெஷின் மூலம் அடியோடு வெட்டி, அதனை துண்டு துண்டாக அறுத்து கடத்தி சென்றுள்ளனர்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தகவலறிந்து குன்றின் மீது சென்று பார்த்தபோது பெரிய அளவிலான செம்மரங்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து கடந்த ஒரு வாரமாக தடயங்களை சேகரித்து, அடையாளம் தெரியாத கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, செம்மரம் எதுவும் திருட்டு போகவில்லை. வேறு சில சின்னசின்ன மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வனத்துறை அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் செம்மரங்கள் அடிக்கடி வெட்டி கடத்தி செல்வது வாடிக்கையாகிவிட்டது. இரவு நேரத்தில் வனக்காவலர்கள் இங்கு வந்து தங்கி பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தற்போது எந்த வனக்காவலரும் இங்கு வந்து தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரியவில்லை. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மரங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொடையூர் குன்றின் மீது உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தி சென்ற கடத்தல் கும்பலை கைது செய்ய வேண்டும் என்றனர்.

The post வனத்துறை பராமரித்து வந்த 25 செம்மரங்கள் வெட்டிக்கடத்தல் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: